நெல்லையில் சுதந்திர தின விழா கோலாகலம்: கலெக்டர் ஷில்பா தேசிய கொடி ஏற்றினார்


நெல்லையில் சுதந்திர தின விழா கோலாகலம்: கலெக்டர் ஷில்பா தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 9:30 PM GMT (Updated: 15 Aug 2019 9:03 PM GMT)

நெல்லையில் நடைபெற்ற கோலாகல சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷில்பா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெல்லை, 

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உடன் சென்றார்.

இதையடுத்து கலெக்டர் ஷில்பா மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சுதந்திர போராட்ட தியாகி மற்றும் மொழிக்காவலர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கியதுடன், வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்கள் 2 பேரின் குடும்பத்தினரையும் கவுரவித்தார்.

முன்னாள் படைவீரர் நல வாரியம் மூலம் ஒருவருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம், இஸ்திரி பெட்டிகள், வீட்டுமனை பட்டாக்கள், விவசாய கருவிகளான விசைத்தெளிப்பான் மற்றும் தெளிப்புநீர் கருவி, மினி டிராக்டர் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 139 பேருக்கு ரூ.1.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 850 மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதி, வ.உ.சி. ஆகியோர் படித்த வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் உள்ளது. அந்த கட்டிட மாதிரியை மைதானத்துக்கு கொண்டு வந்து வைத்து, அதன் முன்பு மாணவர்கள் நடனம் ஆடினர். அதில் 2 பேர் பாரதி, வ.உ.சி. போல் வேடம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் ரசிக்க செய்தது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாண வ-மாணவிகளுக்கு நினைவு பரிசாக கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், தென்காசி மாவட்ட சிறப்பு அலுவலர் அருண் சுந்தர் தயாளன், மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், லட்சுமணன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் நாராயணன், தாசில்தார் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

Next Story