போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இணையதள வழியில் அபராதம் வசூல் - தூத்துக்குடியில் நடைமுறைக்கு வந்தது
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இணையதளம் வழியாக அபராதம் வசூல் செய்யும் முறை தூத்துக்குடியில் நடைமுறைக்கு வந்தது.
தூத்துக்குடி,
போக்குவரத்து விதி மீறல் காரணமாக உயிர் இழப்புகள் அதிகரித்து வருவதால், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களில் வாகன ஓட்டிகளிடம் நவீன எந்திரம் மூலம் இணையதளம் வழியாக அபராதம் வசூல் செய்யும் வசதி சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
தூத்துக்குடியில் தற்போது இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19 எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரம் மூலம் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஏ.டி.எம். கார்டுகளை கொண்டு 2 முறைகளில் அபராதம் வசூல் செய்யப்படுகிறது.
ஒன்று ஏ.டி.எம். கார்டு மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை. மற்றொன்று அந்த எந்திரம் மூலம் வழங்கப்படும் ரசீதை கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள அபராத தொகையை தபால் நிலையம், இ-சேவை மையங்கள் அல்லது பே-டிஎம் என்ற செல்போன் செயலி மூலம் செலுத்தும் முறை உள்ளது.
நேற்று மாலையில் தூத்துக்குடி நகர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் குரூஸ் பர்னாந்த் சிலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து நவீன எந்திரம் மூலம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், இந்த எந்திரத்தின் மூலம் வழங்கப்படும் ரசீதை கொண்டு அபராதம் செலுத்தவில்லை என்றால், அந்த வாகனத்திற்கு காப்பீடு செய்ய முடியாது. பெர்மிட் பெற முடியாது. எனவே வாகன ஓட்டிகள் அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story