சேலம் கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய ரவுடி கைது


சேலம் கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய ரவுடி கைது
x
தினத்தந்தி 16 Aug 2019 3:45 AM IST (Updated: 16 Aug 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அழகாபுரம் குள்ளகவுண்டர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). ரவுடியான இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை வெட்டிய வழக்கில் தினேஷ்குமார், அஜித் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், அஜித் சிறையில் உள்ளார். ரவுடி தினேஷ்குமார் உள்பட 3 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தப்பி ஓட்டம்

இந்தநிலையில், பிடிவாரண்டை தளர்த்தும் வகையில் ரவுடி தினேஷ்குமார் நேற்று முன்தினம் சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த சமயத்தில் மதிய சாப்பாடு நேரம் என்பதால், அவருடன் வந்தவர்கள், சாப்பாடு வாங்கி கொடுப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ரவுடி தினேஷ்குமார் திடீரென தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கைது

இதனிடையே நேற்று காலை அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் ரவுடி தினேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் அருகே மறைவான இடத்தில் தினேஷ்குமார் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story