திருவெண்ணெய்நல்லூர் அருகே, வாகனம் மோதி மூதாட்டி சாவு


திருவெண்ணெய்நல்லூர் அருகே, வாகனம் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 16 Aug 2019 3:30 AM IST (Updated: 16 Aug 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார். தொடர் விபத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி அளந்தாரி (வயது 60). இவர் இளந்துறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் ஆனைவாரிக்கு புறப்பட்டார். மணக்குப்பம் பஸ் நிறுத்தம் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று அளந்தாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அளந்தாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்து நடந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள், அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பதாகவும் இதனை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story