விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில், புள்ளிமான்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்கான புள்ளி மான்கள் தொடர்ந்து பலியாவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் பல பகுதிகளில் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிகளில் புள்ளிமான்கள் உள்ளன. இவைகளை முறையாக பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் பல்வேறு காரணங்களால் புள்ளி மான்கள் பலியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு வனத்துறைக்கு இருந்த போதிலும் மான்கள் பலியாவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.
விருதுநகர் அருகே பட்டம்புதூர், மருளூத்து ஆகிய கிராம பகுதிகளில் உள்ள புள்ளிமான்கள் இரவு நேரங்களில் 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு பலியாகும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அந்த கிராம பகுதிகளில் வேலிகள் அமைக்கப்பட்டும் அங்குள்ள மான்கள் குடிக்க நீர் ஆதாரங்கள் அமைக்கப்பட்டும் மான்கள் பலியாவது தடுக்கப்பட்டது. ஆனால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் திருச்சுழி வட்டாரத்தில் சமீபகாலமாக மான்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. தினசரி நாள் தவறாமல் மான்கள் பலியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது பற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்தபோது அவர் வனத்துறை மூலம் மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனாலும் வனத்துறையினர் பாராமுகமாகவே உள்ளனர்.
வன விலங்குகளை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வனத்துறையினர் வன விலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அந்த வகையில் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் மான்கள் பலியாவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மான்கள் எந்த காரணத்திற்காக நகர் பகுதிக்குள் வந்து பலியாகின்றன என்ற நிலையை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இல்லையேல் மாவட்டத்தில் புள்ளிமான்கள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.
Related Tags :
Next Story