“எத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது” அரிதாஸ் ஸ்தபதி பேட்டி


“எத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது” அரிதாஸ் ஸ்தபதி பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2019 3:57 AM IST (Updated: 16 Aug 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அரசு சிற்ப கலைக்கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவருமான அரிதாஸ் ஸ்தபதி, காஞ்சீபுரம் அத்திவரதர் சிலை குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மாமல்லபுரம்,

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அமைத்த மறைந்த கணபதி ஸ்தபதியிடம் பணியாற்றியவரும், மாமல்லபுரம் அரசு சிற்ப கலைக்கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவருமான அரிதாஸ் ஸ்தபதி, காஞ்சீபுரம் அத்திவரதர் சிலை குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திமரம் என்பது விஷேசமான மருத்துவ குணம் கொண்ட ஒரு மரமாகும். இந்த அத்திவரதர் சிலை காடுகளில் வளர்ந்த அத்திமரத்தை கொண்டு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மூலிகை கலவை பூசப்பட்டதால் எந்தவித சிதிலமும் அடையாமல் அப்படியே இருக்கிறது.

தற்போது மரத்தில் வடிவமைக்கப்படுகின்ற சிற்பங்களுக்கு எந்தவித காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. நீரில் வைத்தாலும் அதன் உறுதி தன்மையை கணக்கிட்டு கூற முடியாது. ஸ்தல விருட்சமாக அத்திமர வழிபாடு என்பது ஏதாவது ஒரு கோவிலில்தான் காணமுடியும்.

எப்படி அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறதோ, அதேபோல் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பிறகும் பொலிவு மாறாமல், சிதிலம் அடையாமல் இருக்கும். தேக்கு, வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் சிலை வடித்து நீரில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுத்தால் அதன் பழைய தோற்றத்தை காணமுடியாது. உருவஅமைப்பு மாறிவிடும் என்பதே உண்மை.

ஆனால் அத்திமர சிலை மூலிகைகள் பூசி குளத்தில் வைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கும்போது அதன் உருவஅமைப்பு அப்படியே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். அத்திமர சிலையை வழிபடும்போது பலவிதமான தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story