சுதந்திர தின விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள், கலெக்டர் ராஜசேகர் தேசிய கொடியேற்றி வழங்கினார்
மதுரையில் சுதந்திர தினவிழாவையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் ராஜசேகர் தேசியக்கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மதுரை,
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ராஜசேகர் தேசியக்கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீசார், ஆயுதப்படை போலீசார், தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதனை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மொத்தம் 124 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதை தொடர்ந்து 88 சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், காவல்துறை, மருத்துவத்துறை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, டி.ஆர்.ஓ. செல்வராஜ், வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில், விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். மேலும் தீயணைப்பு படைவீரர்களால் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்த ஒத்திகை நடந்தது. இதில் விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் முதல்வர் ஜார்ஜ் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரியில் முதல்வர் முகமது அலி ஜின்னா தேசியக்கொடி ஏற்றினார். மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் மாவட்ட பொதுச் செயலாளர் நந்தாசிங் கொடியேற்றினார்.
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவில், மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கொடியேற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தே.மு.தி.க. சார்பில் நடந்த விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் கவியரசு, கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், துணைச் செயலாளர் செந்தில்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் முதல்வர் சுந்தரவாணி தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகள் தேசத்தலைவர்கள் போல வேடமணிந்து, தலைவர்கள் குறித்து பேசினர். முடிவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கிருஷ்ணன் கொடியேற்றினார். இதில் பதிவாளர்(பொறுப்பு) சுதா, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் கொடியேற்றினார்.
Related Tags :
Next Story