கடலில் பாலம் கட்ட எதிர்ப்பு, கிராம சபைக் கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு


கடலில் பாலம் கட்ட எதிர்ப்பு, கிராம சபைக் கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 4:00 AM IST (Updated: 16 Aug 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

மோர்ப்பண்ணை கிராமத்தில் கடலில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கடலூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீனதயாளகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கிராமத் தலைவர் கோவிந்தன், செயலாளர் காளியப்பன், பொருளாளர் அழகப்பன், சமூக சேவகர் துரை பாலன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர்.

அப்போது உப்பூர் அனல் மின் நிலையத்தில் உள்ள அணுமின் உலைகளை குளிர்விப்பதற்காக ஆழ்கடலில் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுக்க மோர்ப்பண்ணை கிராமம் அருகே கடற்கரையில் இருந்து 18 அடி உயரத்துக்கு பாலம் கட்டப்பட உள்ளது.

இதனால் 45 அடி உயரம் உள்ள பாய்மர படகுகள் மோர்ப்பண்ணைக்கு தெற்கே உள்ள திருப்பாலைக்குடி கடல் பகுதிக்கு செல்வதற்கு கரையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இதனால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள். மேலும் மீன் வளம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி தீனதயாளகுமார் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முடியாது என கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) கணேசன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், மாவட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுத்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நாளை (அதாவது இன்று) மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மோர்ப்பண்ணை கிராமத்தில் வீடுகள், தெருக்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story