சுதந்திர தின கிராமசபை கூட்டம், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அவசியம் - கலெக்டர் பேச்சு


சுதந்திர தின கிராமசபை கூட்டம், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அவசியம் - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 11:59 PM GMT)

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அவசியம் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசினார்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகேயுள்ள கல்வார்பட்டியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, குடிமராமத்து பணிகள், கிராம வளர்ச்சித் திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியம். எனவே, கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவசியம் அமைக்க வேண்டும். அதேபோல் குடிநீரை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக அரசு பரிந்துரைத்துள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஉதவித்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் நமது மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழுவினர் கடன் பெற்று தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

இதேபோல் அனைத்து தமிழக அரசின் நலத்திட்டங்களை அறிந்து மக்கள் பயன்பெற வேண்டும். மேலும் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்த தருவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story