டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடல்; ஆர்ப்பாட்டம்- தர்ணா


டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடல்; ஆர்ப்பாட்டம்- தர்ணா
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 16 Aug 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரியில் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் 118 மதுக்கடைகளும் மூடப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி பக்கமுள்ள பேட்டப்பனூரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த ராஜா (வயது 43) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு இவர் கடையை மூடும் நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வசூல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியரை கொலை செய்தவரை கண்டுபிடிக்க வேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளி டாஸ்மாக் குடோனில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், மாவட்ட செயலாளர் மணி, பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் விநாயகம், அண்ணா தொழிற் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாநில துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 118 கடைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர்.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக டாஸ்மாக் குடோன் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அப்போது கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணி நேரத்தை இரவு 10 என்பதை 8 மணியாக குறைக்க வேண்டும். விற்பனை தொகையை நிர்வாகமே நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து மதுக்கடைகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இரவு காவலரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

டாஸ்மாக் ஊழியர் ராஜா படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 118 மதுக்கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தது.

Next Story