நாகையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி; பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்தபோது பரிதாபம்


நாகையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி; பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 Aug 2019 4:45 AM IST (Updated: 17 Aug 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை நம்பியார் நகர் செல்லும் சாலையில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் நேற்று முன்தினம் அடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட நேரமானதால் அடைப்பை நீக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் கைவிட்டனர்.

நேற்று மதியம் நாகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் பாதாள சாக்கடை குழாய் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாதவன்(வயது 38), நாகை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த சக்திவேல்(27), வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்த சந்திப்பு என்ற ஸ்ரீதர்(40) ஆகிய 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக பாதாள சாக்கடை குழாயில் இறங்கி சுத்தம் செய்தனர்.

அப்போது பாதாள சாக்கடை குழாய்க்குள் இருந்த 3 பேருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் மட்டும் தடுமாறி குழாயில் இருந்து மேலே ஏறி வந்து சத்தம் போட்டார். மாதவன், சக்திவேல் ஆகிய இருவராலும் மேலே ஏறி வர முடியாமல் பாதாள சாக்கடை குழாயில் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி சக்திவேல், மாதவன் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் விஷ வாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாதவன், சக்திவேலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

அப்போது அவர்கள் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பணியாளர்களை பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் சங்கர், வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேல் மற்றும் மாதவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போலீசார் மாதவன், சக்திவேலின் உடல்களை நாகை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த ஸ்ரீதருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷ வாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் நாகை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story