விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களின் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பயிர்க்கடன், உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்குதல் மற்றும் பயிர்க் காப்பீடு தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பாலமுருகன், கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குனர் முருகன், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக உள்ளது. இந்த வார இறுதிக்குள் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தங்குதடையின்றி வழங்குவதற்கும், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் டெல்டா பகுதி விவசாயத்திற்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 340 கோடி வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மொத்த பயிர்க்கடன் ரூ.8 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.8 ஆயிரத்து 100 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகவே பயிர்க்கடன் வழங்கப்படும்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை அ.தி.மு.க. ஆட்சியில் 83 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 300 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோல் வழங்கப்பட்டது இல்லை. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கான சாத்திய கூறு இல்லை. விவசாயிகள் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி செலுத்த வேண்டியது இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா மாவட்டங்களிலும் 86 முதல் 90 சதவீதம் விவசாயிகள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி வருகிறார்கள். எனவே பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய என்ன இருக்கிறது? கடனை செலுத்திய பின்னர் தகுதியான விவசாயிகளுக்கு மீண்டும் தாமதம் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார்களிடம் விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படும் நிலை மாறி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யப்போவதாக ‘ஸ்டண்ட்’ அடித்தார். அவரால் எப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முடியும்? மக்களை குழப்பி வாக்குகளை பெற்று வெற்றிபெறுவதற்காக இப்படி பேசினார். நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நமக்கு மத்திய தொகுப்பில் இருந்து அரிசி கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் விலையில்லா அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
ஒரே ரேஷன் கார்டு திட்டம் வந்தாலும் விலையில்லா அரிசி வழங்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உள்ள அளவீடு அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்படும். மீதி விலைக்கு வழங்கப்படும். அதேபோல் தமிழகத்தில் இருந்து அதிகாரிகளோ, பணியாளர்களோ வேறு மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநில விதிமுறைப்படி தான் அரிசி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.திருச்சி அருகே உள்ள எட்டரை கிராமத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த விழாவில் 1,230 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள பயிர்க்கடன் மற்றும் சுய உதவி குழு கடன்களையும் வழங்கினார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story