போலீசாரின் அனுமதியின்றி ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; காஞ்சீபுரம் கலெக்டரை பணி நீக்கம் செய்ய கோரிக்கை
காஞ்சீபுரம் கலெக்டரை பணி நீக்கம் செய்ய கோரி போலீசாரின் அனுமதியின்றி ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்தையொட்டி பாதுகாப்பு பணி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்து, ஒட்டுமொத்த காவல்துறையையும் களங்கப்படுத்தியதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை பணி நீக்கம் செய்ய கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தினர் நேற்றுகாலை ரெயிலடியில் ஒன்று திரண்டனர். விளம்பர பேனரையும் கட்டினர். இதை அறிந்த மேற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்துவதில் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தினர் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து அவர்கள், போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், பொருளாளர் நெல்சன், துணைத் தலைவர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பக்கிரிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் வைரம், அமைப்பு செயலாளர் பாபு, துணை அமைப்பு செயலாளர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story