குழந்தைகள் தத்து எடுப்பு சட்டத்தை எளிமையாக்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் டாக்டர் சரோஜா பேட்டி


குழந்தைகள் தத்து எடுப்பு சட்டத்தை எளிமையாக்க மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் டாக்டர் சரோஜா பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2019 4:15 AM IST (Updated: 17 Aug 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் தத்து எடுப்பு சட்டத்தை எளிமையாக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் டாக்டர் சரோஜா தெரிவித்தார்.

ராசிபுரம்,

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு துறைகள் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தலைமையில் நடந்தது. கூட்ட முடிவில், அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளியோடு இணைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆங்கில வகுப்புகளில், 2,183 சத்துணவு மையங்களில் படிக்கின்ற 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 38 ஆயிரத்து 500 பேர் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 4 இணை சீருடைகள், பாடப்புத்தகம் பள்ளிக் கல்வித்துறை மூலம் விரைவில் வழங்கப்படும்.

ஆங்கில வழிக் கல்விக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் மூலம் ஊட்டச் சத்துமிக்க தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை கொண்ட மாநிலம் என தமிழக அரசு தேசிய அளவில் 4 விருதுகளை பெற்றுள்ளது. குழந்தைகள் பாலின விகிதாசாரத்தை சிறந்த முறையில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இதில் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக உள்ளது.

தமிழகத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.732 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்படும். கடந்த ஜூன் மாதம் முடிய 11.45 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். ரூ.1,500 கோடி அளவிற்கு தங்கமும், ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு திருமண நிதியுதவியும் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 60 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் 35 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக மாநில அரசு ரூ. 2 ஆயிரத்து 236 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் செயலி எனப்படும் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட் போன்களில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கான பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

குழந்தைகள் தத்து எடுப்பு விவகாரத்தில் பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, தத்து எடுப்பு சட்டத்தை எளிமையாக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் குழந்தைகளை தத்து கொடுப்பது, தத்து எடுப்பது குறித்து இணையதளத்தில் பதிவு செய்து இதற்கான மத்திய, மாநில முகமைகள் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆன்லைனில் மட்டுமே குழந்தைகளை தத்து எடுப்பது குறித்து பதிவு செய்திட வேண்டும். எனவே இதில் உள்ள சில கடுமையான விதிகளை தளர்த்த கோரி மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.

Next Story