சைபர் குற்றங்களை தடுக்க சென்னையில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் குறும்பட சி.டி.யை கமிஷனர் வெளியிட்டார்
இணையதள குற்றங்கள் எனப்படும் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காக சென்னை நகர போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சென்னை,
விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்காக சென்னை நகர போலீசார் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தின் சி.டி. வெளியீட்டு விழா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அந்த குறும்படத்தின் சி.டி.யை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைவிட மிகவும் அபாயகரமான குற்றமாக இணையதள குற்றங்கள் எனப்படும் சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளன.
இந்த குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த குறும்படம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்த குறும்படத்திற்கு ‘சகலகலா பூச்சாண்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அருண், தினகரன், பிரேம் ஆனந்த் சின்கா, ஈஸ்வரமூர்த்தி, ஐ.ஜி.அன்பு, ஓய்வுபெற்ற ஐ.ஜி. நல்லசிவம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் நன்றி தெரிவித்தார். விழிப்புணர்வு குறும்படம் தொலைக்காட்சிகளிலும், சினிமா தியேட்டர்களிலும், ‘யூ-டியூப்’ போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story