டாஸ்மாக் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் - கொலை சம்பவத்துக்கு கண்டனம்
டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஊழியர் ராஜாவை வெட்டி கொலை செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தொழிற்சங்க நிர்வாகிகள் நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் அமைந்திருக்கும் டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டனர். சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மது பிரியர்கள் மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் கடைகளை சுற்றி, சுற்றி வந்தனர். நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நேற்றும் பிற்பகலில் கடைகள் திறக்காததால் மதுப்பிரியர்கள் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே சென்னையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மாலையில் மீண்டும் மதுக்கடைகளை திறந்து வியாபாரத்தை கவனித்தனர்.
Related Tags :
Next Story