கோவை விமான நிலைய விரிவாக்கம், நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


கோவை விமான நிலைய விரிவாக்கம், நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 17 Aug 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

சூலூர்,

விண்வெளி கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி குறித்த திறன் மேம்பாட்டு கல்விப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கோவையை அடுத்த அரசூர் ஊராட்சி சங்கோதிபாளையம் பகுதியில் உள்ள ஜி.கே.டி தொழில் நுட்ப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், போயிங் இந்தியா, லேர்னிங் லிங்க் பவுண்டேசன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் இந்த விழா நடந்தது. விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

போயிங் விமான நிறுவனத்துடன் இணைந்து எல்.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த பயிற்சியை நடத்து வது மகிழ்ச்சிக்குரியது. எதிர்காலத்தில், பெட்ரோல், டீசல் கார்கள் பயன்பாடு குறைந்து எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல ஏரோஸ்பேஸ் தொழில் நுட்பமும் அதிகஅளவு வளர்ச்சி அடையும். மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வெளியே வருகின்றனர்.

தமிழகத்தில் மனிதவளம் அதிகமாக இருக்கிறது. உலக அளவில் பணிபுரிகிற என்ஜினீயர்களில் 30 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருக்கிறது. சூலூரில் 300 ஏக்கரில் ராணுவ தொழில் கூட மையம், திருப்பூரில் சிப்காட் தொழிற்பேட்டை மையமும் உருவாக்க அரசிடம் திட்டம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின்னர் தமிழகத்திற்கு அதிக அளவு முதலீடு வருகிறது. தமிழகத்தில் சென்னை-பெங்களூரு, சென்னை - கன்னியாகுமரி ஆகிய தொழில் மேம்பாட்டு தடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கி தொழில் தடம் உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக தொழில் மேம்பாட்டு தடம் விரைவில் அமைக்கப்படும்.

கோவையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டு செயல்படும் போது தொழில் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளில் குடிநீருக்கு மட்டும் ரூ.27 ஆயிரம் கோடி செல விடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.யை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகளை தொழில் துறையினருக்காக இந்த அரசு செய்துள்ளது.

கோவை விமானநிலைய விரிவாக்க பிரச்சினை கடந்த 20 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் இழப்பீடு கொடுக்க வேண்டியது உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவைக்கு இன்னும் நிறைய தொழில் நிறுவனங்கள் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு புத்தகங்களை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் சூலூர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ., தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எல்.எம்.டபிள்யூ. இயக்குனர் சவுந்தரராஜன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, லேர்னிங் லிங்க் பவுண்டேசன் இணை பங்குதாரர் சுதீப் துவே, போயிங் இந்தியா வினியோக தொடர் மேலாண்மை இயக்குனர் அஸ்வினி பார்கவா, ஜி.கே.ஐ.டி.ஆர். நிறுவன இயக்குனர் ஸ்ரீதரன், இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி செயலாளர் வி.பி.கந்தவேல், கண்ணம்பாளையம் அங்கமுத்து, மகாலிங்கம் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story