கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு


கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 17 Aug 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் நீலகிரி மாவட்டத்தில் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆ.ராசா எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையில் 6 பேர் பலியானார்கள். வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு துறைகள் மற்றும் தொண்டு அமைப்புகள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆ.ராசா எம்.பி. சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் மழை வெள்ள பாதிப்பு குறித்து தயாரித்த அறிக்கையை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம், அவர் நேரில் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திராவிடமணி எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ஆ.ராசா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பின்னர் அதுகுறித்து அறிக்கை தயாரித்து நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைத்தல், வீடுகள் கட்டுதல் உள்பட பல்வேறு நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது. ஆனால் துணை முதல்-அமைச்சர் தலைமையில் ஊட்டியில் நடந்த கூட்டத்தில் ரூ.199 கோடிக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் ரூ.30 கோடி மட்டுமே நிவாரண தொகை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த தொகை போதாது. கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தும், நீலகிரியில் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீலகிரி மாவட்ட கலெக்டர் எடுத்த நடவடிக்கைக்கும், அரசு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

நீலகிரியில் 1,500 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன. உடனடியாக கள ஆய்வு செய்து பேரிடர் நிவாரண நிதி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும். சேதம் அடைந்த பயிர்களின் வயது மற்றும் தன்மைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பந்தலூரில் உள்ள தொண்டியாளம், வாழவயல், பொன்னானி, சோலாடி, கூடலூர் 1-வது மைல் ஆகிய நீர்வழித்தடங்களை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவேலியில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன சைனூதீன் குடும்பத்துக்கு சட்ட விதிகளை கணக்கில் கொள்ளாமல் நேரடியாக விசாரித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story