செஞ்சி அருகே, தூக்கில் மாணவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
செஞ்சி அருகே தூக்கில் மாணவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ராஜாம்புளியூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் கோபி(வயது 16). செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கோபி நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் விழா முடிந்ததும் வீடு திரும்பிய கோபியிடம் அவரது பெற்றோர் அருகில் உள்ள வன பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்படி கூறினர். இதையடுத்து ஆடுகளை மேய்க்க சென்ற கோபி மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாயமான கோபியை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் மாணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு வேப்பமரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தூக்கில் பிணமாக தொங்குவதாக கோபியின் பெற்றோருக்கும், செஞ்சி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மகேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, பிணமாக தொங்கியது கோபி என்பது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது உறவினர்கள், கோபியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏழுமலை செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
செஞ்சி அடுத்த ராஜாம்புளியூரை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு வந்து, என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, உங்கள் மகன் எங்கள் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவனை ஒழுங்காக இருக்குமாறு கூறுங்கள். இல்லையென்றால் அவனை அடித்து தூக்கில் தொங்க விட்டு விடுவோம் என்று கூறி மிரட்டிச் சென்றனர். ஆகவே எனது மகன் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். அதன்அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை காதல் விவகாரத்தில் யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story