மழைநீரை சேகரிக்கவில்லையெனில் “நீர்நிலை இல்லாத உலகத்தைத் தான் பார்க்க நேரிடும்” - ‘ஜல்சக்தி அபியான்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
மழைநீரை சேகரிக்கவில்லையெனில் நீர்நிலைகள் இல்லாத உலகத்தைத் தான் பார்க்க முடியும் என 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற ‘ஜல்சக்தி அபியான்’திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து ‘ஜல்சக்தி அபியான்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ‘ஜல்சக்திஅபியான்’ லோகோ வடிவில், 3 ஆயிரம் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-
நல்ல உலகம், நல்ல பள்ளி, கல்லூரி படிப்பு உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம். அதே நேரத்தில் நீர்நிலைகள், இயற்கை வளங்கள், மரங்களை அழிக்கிறோம். மரம் இல்லாமல் நாம் வாழ முடியாது. மழை எல்லோருக்கும் பிடிக்கும். மழைநீரை சேமிக்க வேண்டும். நம் வீட்டு பகுதியில் மழை நீரை நாம் சேமிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி படிப்பை தேர்வு செய்து படிக்கிறோம். இயற்கை வளத்துக்கு நீங்கள் தான் சொந்தக்காரர்கள். மழைநீரை இன்று சேமிக்கவில்லை என்றால் மரம், ஏரி, ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகள் இல்லாத உலகத்தைத் தான் பார்க்க நேரிடும். நம் உடலுக்கு தண்ணீர், ஆக்சிஜனை தேவையான அளவு நாம் எடுத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். மழைவரும்போது சேமிக்க வேண்டும். மழைநீர் பூமிக்குள் செல்ல வேண்டும்.
இன்றைய காலத்தில் பல்வேறு நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் விவசாயம் மற்றும் வீடுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீரின் பயன்பாட்டை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தற்போது கடல்நீர் காற்று மூலம் தண்ணீர் எடுத்து வருகிறோம். இயற்கை வழங்கும் செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, பயிற்சி கலெக்டர் அனந்தமோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, முதன்மை கல்விஅலுவலர் நடராஜன், பள்ளி தாளாளர் அரவிந்த்குமார், செயலாளர் பிரபாகரன், முதல்வர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story