தாமிரபரணி மேல் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும்: மனோஜ் பாண்டியன் வலியுறுத்தல்


தாமிரபரணி மேல் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும்: மனோஜ் பாண்டியன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Aug 2019 3:45 AM IST (Updated: 17 Aug 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி மேல் பாசன கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மனோஜ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

இட்டமொழி, 

பாபநாசம் அணையில் இருந்து ஆற்றுப்பாசனத்தில் மொத்தம் 93 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கு ஜூன் மாதம் 1-ந் தேதி கன்னடியன் கால்வாய், வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அணையில் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் கூட மேல் பாசன கால்வாய்களான கன்னடியன், நதியுன்னி, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் அணையில் தண்ணீர் குறைவாக இருந்த காலங்களில் கூட மேல் பாசன கால்வாய்களில் மட்டுமாவது தண்ணீர் திறந்துவிடப்படும்.

கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அப்போது, சேரன்மாதேவி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மேல் பாசன கால்வாய்களான கன்னடியன், நதியுன்னி, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று அப்போதைய கலெக்டர் தனவேல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

இதுபோல் பலமுறை அணையின் நீர்மட்டம் 50 அடி மற்றும் அதற்கு கீழ் இருந்த போதும், மேற்சொன்ன கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. எனவே பயிரிடப்பட்ட பல லட்சம் வாழைகள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. மேலும் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எனவே தற்போது தண்ணீர் திறக்கப்படவில்லை எனில் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே முந்தைய நடைமுறையை பின்பற்றி தற்போதைய மாவட்ட கலெக்டர், தாமிரபரணி மேல் பாசன கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story