பள்ளிக்கூட மாணவர்கள் சாதி, மத அடையாள கயிறுகள் அணிவது இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


பள்ளிக்கூட மாணவர்கள் சாதி, மத அடையாள கயிறுகள் அணிவது இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2019 5:15 AM IST (Updated: 17 Aug 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட மாணவர்கள் சாதி, மத அடையாள கயிறுகள் அணிவது இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பவானிசாகர்,

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர தின விழா உரையில் நாடு முழுவதும் பாலித்தீன் பைகள் தடை செய்வது குறித்து பிரதமர் பேசி இருக்கிறார். ஆனால் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு எல்லா துறைகளிலும் அனைத்து மாநிலங்களுக்கும், இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழக அரசு இயங்கி வருகிறது. மாணவ-மாணவிகள் சாதி, மத அடையாள கயிறுகள் கட்டி வருவதாக இன்னொரு துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதம் எங்கள் பார்வைக்கு வந்து, அனுமதி பெற்று அனுப்பப்பட்டது அல்ல.

எனவே அதுபற்றி வேறு எதுவும் கூறத்தேவையில்லை. தற்போது பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அந்த நிலை அப்படியே தொடரும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் சாதி, மதத்தை அடையாளப்படுத்தும் கயிறுகள் அணிவது இல்லை. அப்படி எதேனும் இருந்தால் அது சரி செய்யப்படும்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சரியாக நல்ல முறையில் இயங்கி வருகிறது. எனவே ஊடகத்துறையினர் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் செயல்பட தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முழுமையாக ஆய்வு செய்து உடனடி தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் உடன் இருந்தார்.

Next Story