விருதுநகரில் கல்வித்துறையில் அதிகாரிகள் பணி நியமனத்தில் தொடரும் குழப்பம்; மாணவ- மாணவிகள் பாதிக்கும் நிலை


விருதுநகரில் கல்வித்துறையில் அதிகாரிகள் பணி நியமனத்தில் தொடரும் குழப்பம்; மாணவ- மாணவிகள் பாதிக்கும் நிலை
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 10:17 PM GMT)

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கல்வி அதிகாரிகள் நியமனத்தில் குழப்ப நிலை தொடர்வதால் மாணவ-மாணவிகளின் கல்வி திறனில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தனி உதவியாளரும் அவரது பணிகளை உதவி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கான மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்திலேயே இருந்து பணியாற்றி வருகிறார்.

சமீபகாலமாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றில் குழப்பநிலை நீடித்து வருகிறது. வெளிநபர்களின் தலையீட்டின் பேரில் இந்த குழப்பநிலை நீடித்து வருவதாக கல்வித்துறை அலுவலர்கள் புகார் கூறும் நிலை உள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சுவாமிநாதன் இருந்தபோது மீசலூர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனிவாசன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதன்மை கல்வி அதிகாரியின் தனி உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

அப்போது அந்த பணியிடத்தில் சத்திரரெட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் மோகன் என்பவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். பள்ளிக்கல்வி இயக்குனரகத்தால் நியமிக்கப்பட்ட சீனிவாசன் அவருக்கு அளிக்கப்பட்ட பணியிடத்தில் பொறுப்பு ஏற்க முடியாமல் பிரச்சினை நடந்ததின் பேரில் உயர்மட்ட அளவிலான தலையீட்டின் பேரில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு சீனிவாசன் முதன்மை கல்வி அதிகாரியின் தனி உதவியாளராக பொறுப்பு ஏற்றார். அப்போது அந்த பொறுப்பில் இருந்த தலைமைஆசிரியர் மோகன் விருதுநகர் கல்வி மாவட்ட கல்வி அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பு ஏற்றார்.

மாவட்ட கல்வி அதிகாரியாக உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் தான் பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட வேண்டும் என விதிமுறை உள்ளதாக கூறி ஆட்சேபனைகள் எழுப்பப்பட்ட நிலையில் ஆட்சேபனையை மீறி மோகன் மாவட்ட கல்வி அதிகாரியாக பொறுப்பில் நீடித்தார்.

தற்போது பள்ளிக்கல்வி இயக்குனரகம் மாநில அளவில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பணிமூப்பு அடிப்படையில் அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நியமித்து உத்தரவு அளித்தது. இந்த உத்தரவின்படி மதுரை மாவட்டம் காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் வளர்மதி பதவி உயர்வு பெற்று விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பணி நியமன உத்தரவு பெற்ற வளர்மதி நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையாக இருந்த போதிலும் விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்து கல்வி அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பு ஏற்பதற்கு கூடுதல் பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் பொறுப்பு ஏற்ற சில நிமிடங்களில் கல்வி அதிகாரி வளர்மதியின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் மின் அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தது. இதனால் பெண் அதிகாரி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நிலையில் விரக்தியுடன் விருதுநகரில் இருந்து புறப்பட்டு சென்றார்.

பள்ளி கல்வி இயக்குனரகத்தின் இந்த செயல்பாடு கல்வித்துறை அலுவலர்களிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அரசு துறையில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வுக்கான பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து பூர்வமாக உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் பொறுப்பு ஏற்ற சில நிமிடங்களில் அதிரடியாக பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்ட பணியிட மாற்றத்தை ரத்து செய்து குழப்பத்தை ஏற்படுத்துவது என்பது ஏற்புடையது அல்ல. அதிலும் கல்வித்துறையில் இம்மாதிரியான நடவடிக்கைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த கால் நூற்றாண்டாக பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் சாதனை படைத்து வந்த இந்த மாவட்டம் சமீபகாலமாக பின்தங்கியதற்கு காரணம் கல்வித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் செயல்திறன் குறைபாடே என சமூக ஆர்வலர்களால் புகார் கூறப்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட அளவிலான அதிகாரிகளின் நியமனத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் அதிகாரிகளின் செயல்பாட்டிலும், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செயல் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதுடன் இதன் தாக்கம் மாணவ, மாணவிகளையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் எந்த நிலையிலும், வெளிநபர்களின் தலையீட்டை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அதனை ஊக்கப்படுத்துவது என்பது மாவட்ட கல்வித்துறையையும், நிறுவனங்களையும், அதனையொட்டி மாணவ, மாணவிகளையும் பெரும் அளவில் பாதிக்கும்.

Next Story