ராமேசுவரம் கோவிலில் பூஜை கட்டண உயர்வை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகை


ராமேசுவரம் கோவிலில் பூஜை கட்டண உயர்வை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 16 Aug 2019 11:00 PM GMT (Updated: 16 Aug 2019 10:50 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் தரிசனம், பூஜைகளுக்கான கட்டண உயர்வை கண்டித்து கோவில் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் கடந்த 11-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யும் சிறப்பு கட்டணம் மற்றும் ருத்ராபிஷேக பூஜை உள்ளிட்ட அனைத்து விதமான பூஜைகளுக்கும் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பல மடங்கு உயர்த்தப்பட்டு உடனடியாக அமலுக்கும் வந்தது. இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் பூஜை கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,கட்டணஉயர்வை உடனடியாக ரத்துசெய்யக்கோரியும் மாதம் பல கோடி ரூபாய் வருமானம் தரும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யக்கோரியும்,குருக்கள் பற்றாக் குறையால் மூடப்பட்டுள்ள பல சன்னதிகளை திறந்து பூஜை செய்யக்கோரியும், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முறையாக பிரசாதம் வழங்க வேண்டும். ஆண்டு தோறும் கோவிலில் நடைபெறும் மாசி சிவராத்திரி திருவிழா,ஆடித் திருக்கல்யாண திருவிழாக்களை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோவில் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட செயலாளர் ராஜசேகர்,நகர் தலைவர் நம்புராஜன், நகர்பொது செயலாளர் சரவணன், மண்டபம் ஒன்றிய துணைதலைவர் கண்ணன், மண்டபம் ஒன்றிய பொது செயலாளர் வராஹிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் உள்பட ஏராளமானோர் சன்னதி தெரு பகுதியில் இருந்து ஊர்வலமாக கோவில் அலுவலகம் நோக்கி சென்று கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திலகராணி,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு,கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் உள்ளே சென்று போராட்டம் நடத்த கூடாது என கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதை தொடர்ந்து இந்து முன்னணியினர் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் 2 பேர் மட்டும் கோவில் அலுவலகத்திற்குள் வந்து இணை ஆணையரை சந்தித்து உங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்கலாம் என பேசினர்.

அதற்கு இந்து முன்னணியினர் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் கோவில் இணை ஆணையர் கல்யாணி வாசல் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய இந்து முன்னணியினரிடம் பேச்சு வார்ததை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

தரிசன கட்டணம் மற்றும் பூஜை கட்டணம் ஆணையரின் உத்தரவுபடிதான் உயர்த்தப்பட்டுள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருவிழாக்களுக்கு ஆணையர் உத்தரவிட்டும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தான் நடத்த முடியும். அனைத்து சன்னதிகளிலும் தினமும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையரின் உத்தரவு கிடைக்கப்பெற்றபின் பணி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதலாக வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறி போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story