வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்; கவர்னர், முதல்-அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்


வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்; கவர்னர், முதல்-அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 17 Aug 2019 4:30 AM IST (Updated: 17 Aug 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி,

வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் செங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றன. அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 23-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். விசேஷ பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. இதன்பின் காலை 8 மணி அளவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், துணை கலெக்டர் (தெற்கு) சவ்ரவ் சுரப் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தேரோட்டத்தில் புதுச்சேரி முழுவதும் இருந்தும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரியில் இருந்து அரியாங்குப்பம் வழியாக வீராம்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

அரியாங்குப்பம் அய்யப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வால் மேற்பார்வையில், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story