வடகாடு அருகே, புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவி மர்மச்சாவு - கிணற்றில் பிணமாக மீட்பு
வடகாடு அருகே புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அனுசுயா (வயது 17). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அனுசுயா தனது சகோதரி அனிதாவுடன் கால்நடைகளுக்கு புல் அறுக்க சென்றார்.
ஆனால் அனிதா மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அனுசுயா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனுசுயாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து முருகேசன் தனது மகளை காணவில்லை என வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து வடகாடு போலீசார் மற்றும் உறவினர்கள் அனுசுயா புல் அறுக்க சென்ற பகுதிகளில் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தரைமட்ட கிணற்றில் செருப்புகள் மிதப்பதை அவர்கள் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஆலங்குடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாதாளகரண்டி கொண்டு கிணற்றில் தேடினர். அப்போது, கிணற்றுக்குள் அனுசுயா பிணமாக கிடந்தது தெரியவந்தது. அதன் பின் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட அனுசுயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வடகாடு போலீசார் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசுயாவின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுசுயா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்மநபர்கள் யாரும் கொலை செய்து அனுசுயாவின் உடலை கிணற்றில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story