சேத்தியாத்தோப்பில், கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - நிலுவைத்தொகை வழங்கக்கோரி நடந்தது
சேத்தியாத்தோப்பில் நிலுவைத்தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
2018-2019-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தின் நிலுவைத்தொகை ரூ.10 கோடியே 72 லட்சத்தை உடனே வழங்க வேண்டும், வாகன வாடகை மற்றும் டீசல் பில் வழங்க வேண்டும், வருகிற அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்தியாத்தோப்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் செந்தமிழ்செல்வன், துணைத்தலைவர் ஆதிமூலம், கற்பனை செல்வன், கோவிந்தராசு, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது விவசாயிகள், தங்களது கைகளில் கரும்புகளை ஏந்தியபடி அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்க்கரை ஆலையின் தலைவர் பாலசுந்தரத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story