கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய, கல்லூரி மாணவர்களிடம் 4 பவுன் சங்கிலி-செல்போன் பறிப்பு


கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய, கல்லூரி மாணவர்களிடம் 4 பவுன் சங்கிலி-செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 10:30 PM GMT (Updated: 16 Aug 2019 11:33 PM GMT)

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவர்களிடம் 4 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கே.கே.நகர், 

தஞ்சையை சேர்ந்தவர் ரகுமான்(வயது 23). கல்லூரி மாணவரான இவர் உள்பட 5 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். 5 பேரில் 3 பேர் கல்லூரி மாணவர்கள், மற்ற 2 பேர் கார் மெக்கானிக்குகள் ஆவார்கள். இவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு கொடைக்கானலில் இருந்து மீண்டும் தஞ்சை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி மன்னார்புரம் வழியாக டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலத்தில் அவர்களுடைய கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென காரை வழிமறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உள்பட 5 பேரும் காரில் இருந்து கீழே இறங்கினர். அப்போது அவர்கள் 3 பேரும் காரில் வந்தவர்களிடம் தங்கள் மீது மோதுவது போல் எப்படி காரை ஓட்டலாம் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி காரில் 2 பேர் ஏறிக்கொண்டனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு காரில் சென்றதும், அங்கு மாணவர்களை தாக்கி அவர்கள் அணிந்து இருந்து 4 பவுன் சங்கிலியையும், செல்போனையும் பறித்து கொண்டனர்.

பின்னர் காரில் மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே வந்ததும், காரை நிறுத்தினர். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து மாணவர்கள் நேற்று காலை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி மாணவர்களிடம் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகிறார்கள்.

* துறையூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). இவர், 15 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இந்தநிலையில் அந்த சிறுமியை அவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

*வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம் பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுங்கச்சாவடியை லாரி ஒன்று கடந்து செல்வதற்கு சற்று காலதாமதமானதால் அந்த வழியாக காரில் வந்தவர்கள் லாரியில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காரில் வந்தவர்களை அழைத்து சமாதானம் செய்த போது காரில் வந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து காரில் வந்தவர்கள் பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக சென்றதை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

*மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள மினிக்கியூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 37). இவர் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மொபட்டில் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கீரணிப்பட்டி அருகே உள்ள ஒரு குளத்திற்கு எதிரே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 6¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தாநத்தத்தை அடுத்த கருமலையில் ஒரு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி கடும் அவதிக்கு ஆளான மக்கள் நேற்று மாலை மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் கருமலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

*உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஒக்கரையை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது 32). இவருடைய மனைவி பிரியா(25). இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் பிரியா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியில் இருந்த வாசுதேவன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவருடைய உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*முக்கொம்பு மேலணையில் கொள்ளிடத்தில் தற்காலிக கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இந்திய தொழில் நுட்ப கழகத்தில்(ஐ.ஐ.டி.) அனுபவம் பெற்ற வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழு பரிந்துரைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் மேஜர் ஜெனரல் பத்மநாபன், பேராசிரியர் பூமிநாதன் ஆகியோர் பார்வையிட்டு, வெள்ளம் வழிந்தோடும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் உள்ளிட்டவற்றின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்வம், உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர். மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வந்தால் அதனை பாதுகாப்பாக வெளியேற்றவும் பொதுப்பணித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

*மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தை சேர்ந்த ஒரு வாலிபர், 15 வயது சிறுமியை கடத்தி தனது நண்பர் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, ஊருக்கு கொண்டு வந்து விட்டுள்ளார். அப்போது ஊர் பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story