குமரியில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் - மது கிடைக்காமல் பரிதவித்த மது பிரியர்கள்
குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மது கிடைக்காமல் 3 மணி நேரம் மது பிரியர்கள் பரிதவித்தனர்.
நாகர்கோவில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை கொன்று பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் குமரி மாவட்டத்திலும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே சுதந்திர தினத்தையொட்டி நேற்றுமுன்தினம் மது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், எப்போது கடை திறக்கும், மது அருந்தலாம் என எதிர்பார்த்திருந்த மது பிரியர்கள் நேற்று டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தால் மது கிடைக்காமல் பரிதவித்தனர். அதே சமயத்தில் மது பிரியர்களில் பலர், டாஸ்மாக் கடை எப்போது திறந்தாலும் சரி, மது அருந்தி விட்டு தான் செல்வது என்ற முடிவோடு மதுக்கடை மற்றும் மதுபான பார்களில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் ஆங்காங்கே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். ஆனால் சாதாரணமாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் தொகையை விட ரூ.50, ரூ.100 என கூடுதல் விலையை நிர்ணயித்து வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மது கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்கள், கூடுதல் விலை கொடுத்தும் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு 3 மணிக்கு கடைகளை திறந்தனர். அப்போது அங்கு காத்திருந்த மது பிரியர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. மேலும் தாமதமாக கடைகள் திறக்கப்பட்டதால், இரவு வரை கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது, குமரி மாவட்டத்தில் மொத்தம் 95 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள 15 மதுபானக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு வழக்கம் போல் திறக்கப்பட்டன. மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன அவை பிற்பகல் 3 மணிக்கு பிறகு தான் திறக்கப்பட்டது. 3 மணி நேரம் தாமதத்தால் விற்பனை பாதிப்பு எதுவும் இல்லை என்றார்.
Related Tags :
Next Story