கொட்டாரத்தில், அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் பொருட்களை சூறையாடிய கொள்ளையர்கள், நகை-பணம் சிக்காததால் ஆத்திரம்


கொட்டாரத்தில், அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் பொருட்களை சூறையாடிய கொள்ளையர்கள், நகை-பணம் சிக்காததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 17 Aug 2019 4:15 AM IST (Updated: 17 Aug 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாரத்தில் அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்தது. நகை-பணம் சிக்காததால் கொள்ளையர்கள் பொருட்களை சூறையாடி சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கன்னியாகுமரி,

கொட்டாரம் மிஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் டேவிட்தாஸ் (வயது 64). இவர் ஓய்வு பெற்ற வட்ட வழங்கல் அதிகாரி. இவர், சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு டேவிட்தாசின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்தனர். அதில் நகை-பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த துணிகளை அறை முழுவதும் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றனர்.

மறுநாள் காலையில் டேவிட்தாசின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் டேவிட் தாசுக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதேபோல் கொட்டாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி வீட்டிலும் நள்ளிரவில் கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால், அங்கும் நகை-பணம் எதுவும் சிக்காததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் ஒரே நாள் நள்ளிரவில் நடந்திருப்பதால் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story