பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் பீதி


பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 18 Aug 2019 4:15 AM IST (Updated: 18 Aug 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அரசப்பன் (வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் 3 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். தினமும் வெள்ளாடுகளை தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிஅளவில் தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த வெள்ளாடுகள் அலறி அடித்தப்படி வேகமாக ஓடிவந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசப்பன் தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று, ஆட்டை அடித்து கடித்துக்கொண்டு இருந்ததை கண்டதும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பீதியில் அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர்.

பொதுமக்கள் வருவதை கண்டதும் அந்த சிறுத்தை, ஆட்டை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டது. பின்னர் பொதுமக்கள் அனைவரும் சிறுத்தை தாக்கிய ஆட்டின் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த ஆடு இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால்தடம் சிறுத்தையின் கால் தடம் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அன்று இரவு முழுவதும் வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் அருகே சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பவானிசாகர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து ஒரு ஆட்டை அடித்துக்கொன்றது. இதனால் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதன்படி சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. தற்போது மீண்டும் பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்து ஒரு ஆட்டை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. இதனால் நாங்கள் அனைவரும் பீதியில் உள்ளோம். எனவே மனிதர்களை சிறுத்தை தாக்குவதற்குள் மீண்டும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வனத்துறை சார்பில் பசுவபாளையம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

Next Story