மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவ நிறுவனங்கள் உடனே அங்கீகாரம் பெற வேண்டும்; கலெக்டர் தகவல்


மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவ நிறுவனங்கள் உடனே அங்கீகாரம் பெற வேண்டும்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மருத்துவ நிறுவனங்கள் உடனே அங்கீகாரம் பெற வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியின் கீழ் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதி தேதியானது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்படும்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகள் மற்றும் மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தை உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தையும் பெற வேண்டும். தவறினால் சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்க உத்தரவிடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story