பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலையில் தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து, பேசினார். அப்போது, அவர் கூறுகையில், மாணவர்கள் தமிழை மனப்பாடமாக படிக்க கூடாது. அதன் அர்த்தத்தை புரிந்து படிக்க வேண்டும். தொன்மையான மொழிகளில் உயிர்ப்போடு இருக்கும் மொழி தமிழ் தான். தமிழின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். சாதி, மதம் கடந்து நம்மை இணைப்பது தமிழ் தான். அதனை விட்டு கொடுக்க கூடாது. மாணவர்கள் தமிழை சரியான முறையில் உச்சரிக்க பழக வேண்டும் என்றார்.
இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story