களக்காடு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
களக்காடு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகள் அருணா (34). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கும், பணகுடி அருகே உள்ள ராமசந்திரன் மகன் கல்யாண சுந்தரத்திற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கல்யாண சுந்தரத்திற்கு அருணா 2-வது மனைவி ஆவார். இவர்களுக்கு முப்பிடாதி (13) என்ற மகனும், ராஜேஸ்வரி(6) என்ற மகளும் உள்ளனர்.
இதற்கிடையே கல்யாண சுந்தரத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அருணா அவரை விட்டு பிரிந்து கோவிலம்மாள்புரத்தில் உள்ள தந்தை பரமசிவன் வீட்டில் வசித்து வந்தார். கல்யாண சுந்தரம் மகன், மகளுடன் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் அருணா தனது கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடும்படி வள்ளியூர் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருணாவுடன் சேர்ந்து வாழும்படி கல்யாண சுந்தரத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அதன் பின்னரும் கல்யாண சுந்தரம் அருணாவுடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த அருணா சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை, உறவினர்கள் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அருணா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பரமசிவன் அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story