தென்காசி தனி மாவட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்: பொதுமக்களின் கருத்துகள் அரசுக்கு அறிக்கையாக வழங்கப்படும் - வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தகவல்
தென்காசி தனி மாவட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து அரசிடம் வழங்கப்படும் என்று சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தெரிவித்தார்.
நெல்லை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
காலை 10 மணி முதல் 11 மணி வரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மக்கள் நெல்லை மாவட்டத்தை பிரிப்பதை வரவேற்கவில்லை. அம்பை, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கொடுத்த மனுவில், “சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்கள் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும். நெல்லையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேலநீலிதநல்லூர் பகுதி மக்கள் தென்காசி செல்லவேண்டுமானால் 80 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டும். போக்குவரத்து வசதிகளும் கிடையாது. எனவே, இந்த பகுதிகளை நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
வன்னிக்கோனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வேலுச்சாமி, வன்னிக்கோனேந்தல் பகுதி தி.மு.க. செயலாளர் செல்வராஜ், அ.ம.மு.க. தொழிற்சங்க செயலாளர் அண்ணாசாமி ஆகியோர், சங்கரன்கோவில் தாலுகா, திருவேங்கடம் தாலுகா நெல்லை மாவட்டத்திலேயே தொடர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் கசமுத்து, அம்பை தாலுகாவை நெல்லை மாவட்டத்தில் தான் நீடிக்க வேண்டும். காங்கிரஸ் நிர்வாகி வக்கீல் பால்ராஜ், தமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் ராஜதுரை ஆகியோர் கொடுத்த மனுவில், ஆலங்குளம் தொகுதியை தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது. நெல்லை மாவட்டத்தில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சங்கரன்கோவில் பகுதி நெல்லை மாவட்டத்தில் தொடர வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியை சேர்ந்த வக்கீல் ராஜசேகர், கடையம் யூனியனில் உள்ள 24 கிராம பஞ்சாயத்தையும், ஒரு பேரூராட்சியையும் தென்காசி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதேபோல் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த மக்களும் தங்களை தென்காசி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
இதுகுறித்து ஞானதிரவியம் எம்.பி. கூறுகையில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள எந்த சட்டசபை தொகுதிகளையும் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்ப்பதால் எந்த நன்மையும் கிடையாது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.
நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்களை சேர்த்து வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு ஒரு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்கும் போது குற்றாலம் அருவி அங்கே சென்றுவிடும். எனவே, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகியவற்றை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். வள்ளியூரை நகரசபையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “தென்காசி மாவட்டம் என்பது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதி மக்களுக்கு சரியானதாக இருக்கும். ஆனால் சங்கரன்கோவில் பகுதி மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தலைநகரமாக நாகர்கோவில் இருப்பது போல் தென்காசி மாவட்டத்துக்கு தலைநகரமாக சங்கரன்கோவிலை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் யூனியன் பகுதிகள் தொடர்ந்து நெல்லை மாவட்டத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.
இன்ப துரை எம்.எல்.ஏ. கூறுகையில், “வள்ளியூரை தனி சுகாதார மாவட்டமாக அறிவித்து வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். திசையன்விளை அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்தை திசையன்விளை தாலுகாவோடு இணைத்து நெல்லை மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்“ என்றார்.
இதற்கு பதில் அளித்து சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இதுபோல் பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளனர். இந்த கருத்துகளை அறிக்கையாக தயாரித்து எந்த பகுதியை எங்கே சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வழங்கப்படும்.
தென்காசி மாவட்டத்திற்கு தேவையான அலுவலகங்கள், பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எவ்வளவு தேவை என்பதை தனி அதிகாரி அறிக்கை தயாரித்து கொடுப்பார். இதன் அடிப்படையில் பணியாளர்கள் ஒதுக்கப்படுவார்கள். மாவட்டம் அமைக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியிட்ட பிறகு மாவட்ட அலுவலகம் செயல்படும். குடிமராமத்து பணிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளது. தற்போது நடக்கும் குளம், கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா, அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், ஞானதிரவியம், தனுஷ்குமார், தென்காசி மாவட்ட தனி அலுவலர் அருண்சுந்தர்தயாளன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி கலெக்டர்கள் மணிஸ்நாரணவரே, ஆகாஷ், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, முருகையாபாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தென்காசியிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story