ஜமாபந்தி விழாவில் பெறப்பட்ட மனுக்களில் 9 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு


ஜமாபந்தி விழாவில் பெறப்பட்ட மனுக்களில் 9 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2019 3:15 AM IST (Updated: 18 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி விழாவில் பெறப்பட்ட மனுக்களில் 9 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

செய்யாறு,

செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாய மாநாடு நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் கே.விமலா வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, 2,138 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் துறைகளில் முக்கிய துறையாக விளங்குவது வருவாய் துறையாகும். வருவாய் துறையின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாவில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி விழா நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து 18 ஆயிரத்து 35 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 9 ஆயிரத்து 18 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக 3 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டரில் பயிர் சாகுபடியும், 7 ஆயிரம் ஹெக்டரில் முக்கிய சிறுதானியமான சாமை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2017-2018-ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களைவிட 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து மாநிலத்திலேயே அதிகபட்ச அரிசி உற்பத்தி என்ற பெருமையை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் ரூ.16 கோடியே 7 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் 12 ஆயிரத்து 213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.நடராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, மகேந்திரன், டி.பி.துரை, திருமூலன், கோபால், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story