மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை: அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 187 மில்லி மீட்டர் பதிவு


மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை: அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 187 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 18 Aug 2019 3:00 AM IST (Updated: 18 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 187 மில்லி மீட்டர் பதிவானது.

திருவண்ணாமலை, 

கோடை காலம் முடிவடைந்தும் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். மழை பொழிய வேண்டி கிராமங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூழ்வார்த்து வருண யாகம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென திருவண்ணாமலையில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நேற்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

புதுப்பாளையம் அருகே உள்ள ஜப்திகாரியந்தல் கிராமத்தில் பெய்த மழையினால் அந்த கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிவிடும். அதிக நாட்கள் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை வசதியும் கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை’ என்றனர்.

இதே போல கலசபாக்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கலசபாக்கம் -187, வெம்பாக்கம் -16.60, செய்யாறு -26, வந்தவாசி -28, ஆரணி -35.20, தண்டராம்பட்டு -37, செங்கம் -40.40, சாத்தனூர் அணை -44.60, திருவண்ணாமலை -48.60, கீழ்பென்னாத்தூர் -61.60, சேத்துப்பட்டு -74.60, போளூர் -107. 

Next Story