விடிய, விடிய பலத்த மழை: வேலூரில் 165.7 மில்லி மீட்டர் பதிவானது


விடிய, விடிய பலத்த மழை: வேலூரில் 165.7 மில்லி மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 18 Aug 2019 3:00 AM IST (Updated: 18 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. வேலூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதிகபட்சமாக வேலூரில் 165.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வேலூர், 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. அதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. பின்னர் சாரல் மழை பெய்தது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் மழையின் தாக்கம் அதிகரித்தது. சுமார் 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. மழைநீரால் கழிவுநீர் கால்வாய் நிரம்பியது. மழைநீரோடு கழிவுநீர் கலந்து சாலையோரம் சென்றது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக சாலை, தெருவோரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

பலத்த மழையால் வேலூர் மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. வேலூர் புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அணுகுசாலை, அண்ணாசாலை உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் மழைநீர் ஆறுபோன்று ஓடியது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வேலூர் நேதாஜி மார்க்கெட், மாங்காய் மண்டியில் மழைநீர் புகுந்து முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. பல இடங்கள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அதனால் காலையில் காய்கனி வாங்க வந்த பலர் திரும்பி சென்றனர்.

வேலூர் கன்சால்பேட்டை, இந்திராநகர், திடீர்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. கன்சால்பேட்டை, இந்திராநகரில் உள்ள வீடுகளுக்குள் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. வீடு இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் பல குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சில குடும்பத்தினர் வீட்டின் மேல்தளத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர். வீட்டில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் தூக்கமில்லாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

மழையால் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவில் உள்ள வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.

காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, அரக்கோணம், திருப்பத்தூர், குடியாத்தம், வாலாஜா உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் சென்றனர். மழை காரணமாக பல்வேறு பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கிடையே நேற்று காலை 7.30 மணியளவில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அறிவித்தார்.

வேலூரில் அதிகபட்சமாக 165.7 மில்லி மீட்டர் (16 செ.மீ.) மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 8 மணிவரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காட்பாடி-109, ஆலங்காயம்-80.2, அரக்கோணம்-46, ஆம்பூர்-40.8, காவேரிப்பாக்கம்-33.8, வாணியம்பாடி-32, பொன்னை-28, திருப்பத்தூர்-23.5, சோளிங்கர்-23, பொன்னை-28, வாலாஜா-14.8, குடியாத்தம்-14.6.

Next Story