தர்மபுரி கோவில்களில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா திரளான பக்தர்கள் தரிசனம்


தர்மபுரி கோவில்களில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:00 AM IST (Updated: 18 Aug 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கோவில்களில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி விருபாட்சிபுரத்தில் புத்திகே மட கிளையில் உள்ள ராகவேந்திர சாமி கோவிலில் ராகவேந்திர சாமியின் 348-வது ஆண்டு ஆராதனை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாராயணசாமி பூஜை, கோபூஜை, தான்ய பூஜை, சாமிக்கு பூர்வ ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று ராகவேந்திர சாமிக்கு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி 108 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் கனக பூஜையும், 1008 இளநீர் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராகவேந்திர சாமிக்கு உத்திர ஆராதனையும், நாளை (திங்கட்கிழமை) ஸ்ரீஸீக்ஞானேந்தர் ஆராதனையும், சர்வ பல சமர்ப்பண ஆராதனையும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் சுப்ரபாதம், நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், கனக மகா பூஜை, மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் ஆன்மிக உரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்துஉள்ளனர்.

பாரதிபுரம் கோவில்

இதே போன்று தர்மபுரி பாரதிபுரத்தில் குரு ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ராகவேந்திர சாமி கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சத்திய நாராயணபூஜை, கோபூஜை, தான்யபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பூர்வ ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று ராகவேந்திர சாமி ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று உத்திர ஆராதனையும், நாளை சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருராகவேந்திரா சேவா டிரஸ்ட் தலைவர் சாய்ராம், செயலாளர் விஸ்வநாதன், நிர்வாகி சுந்தர்ராஜன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.

Next Story