குமாரபாளையம் தொகுதியில் ரூ.5 கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்


குமாரபாளையம் தொகுதியில் ரூ.5 கோடியில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை நேற்று அமைச்சர் தங்கமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பள்ளிபாளையம்,

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சியும், முடிவுற்ற திட்டப்பணிகளின் திறப்புவிழா நிகழ்ச்சியும் நேற்று மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.

இவற்றில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜைசெய்து பணியை தொடங்கிவைத்தார். மேலும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதையொட்டி குப்பாண்டபாளையம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் பூலக்காடு மாரியம்மன் கோவில் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை வடிகால் அமைக்கும் பணி, ரூ.2 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் மற்றும் அலுவலக குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி, ஆலாம்பாளையம் பேரூராட்சியில் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு தொட்டிபாளையத்தில் தார்சாலை அமைக்கும் பணி உள்பட ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை செய்தார்.

புதிய கட்டிடங்கள்

பின்னர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடச்சநல்லூர் ஊராட்சி தாஜ் நகரில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய ரேஷன்கடை கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், கொக்கராயன்பேட்டை மீனவர் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

மேலும் கொக்கராயன்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதிஉதவி திட்டத்தின் கீழ் 14 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நலப்பெட்டகங்களையும், 17 கர்ப்பிணிகளுக்கு காசோலைகளையும், பெண் குழந்தைகளை பெற்றெடுத்த 11 பேருக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பரிசுகள், மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செந்தில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், குமாரபாளையம் நகர வங்கி தலைவர் நாகராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமாரபாளையத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 5,200 டாஸ்மாக் கடைகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைப்படி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. அது விரைவாக சரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Next Story