உப்பூர் அனல்மின்நிலையத்திற்கு கடலில் பாலம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகளை நிறுத்த சமாதான கூட்டத்தில் முடிவு


உப்பூர் அனல்மின்நிலையத்திற்கு கடலில் பாலம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகளை நிறுத்த சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 9:45 PM GMT)

உப்பூர் அனல்மின் நிலைய திட்டத்தில் கடலில் சாலை அமைப்பதற்கும், கடலில் வெப்ப நீர் கொட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் சமதான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தற்காலிகமாக பணிகளை நிறுத்த முடிவுசெய்யப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் அணுமின் உலைகளை குளிர்விப்பதற்காக ஆழ்கடலில் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மீண்டும் கடலில் தண்ணீர் விடப்பட உள்ளது. இதற்காக மோர்பண்ணை கிராமம் அருகே கடலில் சாலையும், அதனை தொடர்ந்து பாலமும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோர்ப்பண்ணை கிராம மக்கள் ஏராளமானோர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அதிகாரிகள் மறுத்ததால் வெளிநடப்பு செய்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்ததோடு, வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி இருந்தனர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மோர்ப்பண்ணை கிராமத்தினரின் கோரிக்கை தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சமாதான விளக்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், மோர்ப்பண்ணை கிராமத்தினர், சமூக ஆர்வலர்கள் கடலில் சாலை அமைப்பதற்கும், பாலம் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணுமின் உலைகளை குளிர்விப்பதற்காக கடலில் எடுக்கப்படும் தண்ணீர் சுடுநீராக மீண்டும் கடலில் கொட்டப்பட உள்ளது .இதனால் கடலில் மீன்வளம் மற்றும் அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். மேலும், பாய்மரபடகுகள் கடலுக்கு செல்வதில் இடையூறு ஏற்படும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பாலம் மற்றும் சாலை அமைப்பது குறித்து திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை. முறையாக கருத்து கேட்பு நடத்தப்படாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

எனவே, உடனடியாக இந்த திட்டத்தினை மாற்று முறையில் நிறைவேற்ற வேண்டும், அவ்வாறு சாத்தியமில்லை என்றால் மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இந்ததிட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த கலெக்டர், திட்டம் குறித்து மீனவர்களுக்கு தெளிவாக விளக்கி கூறியதோடு, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அனைத்து மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே முடிவு செய்யமுடியும் என்று அனைத்து தரப்பினரின் கருத்தினை முழுமையாக கேட்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதால் வருகிற 22-ந் தேதி இதுதொடர்பாக மீண்டும் கூட்டம் நடத்துவது என்றும், அதுவரை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைபடி கடலில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள், பாலம் பணிகளை மட்டும் அடுத்த கூட்டம் நடைபெறும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:- ஆயிரத்து 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுவரும் உப்பூர் அனல்மின்நிலைய திட்டத்தினால் அந்த பகுதி மட்டுமல்லாது அனைவருக்கும் அதிக பயன் கிடைக்கும். கடலில் பாலம், சாலை அமைப்பது குறித்து திட்ட அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக அனைத்து துறையின் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும், கடலில் மேற்கண்ட வெப்பநீர் ஒரே இடத்தில் கொட்டப்படுவதில்லை. பரவலாக பல இடங்களில் விடப்படுவதால் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. இதுதவிர, இந்த நீரை கொண்டு வந்து திருப்பி கொண்டுசெல்வதற்கான குழாய்கள் பதிப்பதற்காகவே கடலில் பாலம் கட்டப்படுகிறது. அதற்கான பொருட்களையும், வாகனங்களையும் கொண்டு செல்ல கடல் ஆழம் இல்லாமல் இருப்பதாலேயே தற்காலிக சாலை போடப்படுகிறது. பணி முடிந்ததும் சாலை முழுமையாக அகற்றப்பட்டுவிடும். இதனால் படகுகள் சென்றுவருவதில் எந்த இடையூறும் ஏற்படாது. அடுத்ததாக 22-ந் தேதி கூட்டம் நடைபெறும் வரை சாலை மற்றும் பாலம் பணிகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இதர பணிகள் வழக்கம்போல நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story