விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகிய நவீன கருவிகள் முறையான பயன்பாட்டில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காயம், சிறுநீரகம், தோல், எலும்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக பிரசவ வார்டில் தலைமை சிறப்பு டாக்டர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் பிரசவத்துக்கு வரும் பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் மதுரைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட உள்ளேன்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், சிறப்பு பிரிவுகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட கட்டிடங்கள், அதற்குள் சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே தற்போது நடைபெறும் கட்டுமான பணியை தரமாக செய்திட அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.டிஜிட்டல் எக்ஸ்ரேக்கு ஜெனரேட்டர் வசதி இல்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. நோயாளிகளும் தங்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இந்த வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரகலாதன், அன்புவேல், முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story