சர்வதேச தர சான்றிதழுக்கான, சிறப்பு மானியம் பெற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


சர்வதேச தர சான்றிதழுக்கான, சிறப்பு மானியம் பெற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:15 AM IST (Updated: 19 Aug 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச தர சான்றிதழுக்கான சிறப்பு மானியம் பெற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊட்டி,

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு சர்வதேச தர சான்றிதழ் பெறுவது வழக்கம். சர்வதேச தர சான்றிதழ் பெற ஏற்படும் செலவின் தொகையில், அதாவது ஒவ்வொரு சான்றளிப்பு நிறுவனத்துக்கு கொடுக்கப்படும் தொகையில் 100 சதவீதம்(அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை) மற்றும் சுகாதாரம் மேம்படுத்துதல், தர கட்டுப்பாட்டு ஆய்வு வசதிகள் போன்றவைகளுக்கு வாங்கப்படும் எந்திரங்கள் மற்றும் கட்டுமான செலவுகளுக்கு 50 சதவீதம்(அதிபட்சமாக 2 லட்சம் வரை) மானியம் வழங்கும் திட்டத்தை சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வாயிலாக செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் தர சான்றிதழ் பெற்ற சிறு, குறு, நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களும் தகுதி உடையனவாகும். இந்த நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தர சான்று பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய அமைப்புகள் மூலமாக சர்வதேச தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தர நிர்ணய சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டு காலத்துக்குள் நீலகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இந்த மானியத்தை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகள் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச தர சான்றிதழுக்கான சிறப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story