ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்


ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:30 PM GMT (Updated: 18 Aug 2019 6:43 PM GMT)

ஆனைமலையின் சுற்றுவட்டார பகுதிகளில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.

ஆனைமலை,

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் உள்ளன. இவற்றிற்கு ஆழியாறு அணையில் இருந்து பல்வேறு கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று 18-ந் தேதியில் இருந்து ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர். தொடர்ந்து கால்வாயில் வெளியேறிய தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-

பழைய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகளின் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக ஆவின்பாலின் விற்பனை விலையை உயர்த்தி தான் ஆகவேண்டும். இதனை பொதுமக்கள் உணர்ந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் ரவிக்குமார், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், அ.தி.மு.க. ஒன்றிய (மேற்கு) செயலாளர் கார்த்திக் அப்புசாமி, பெத்தநாயக்கனூர் துரைசாமி, பழனியூர் ஆறுமுகம், கோட்டூர் சி.டி.சி. ஜெய்லாப்தீன், அஜீஸ், ஆனைமலை பட்டீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி கூறுகையில்,

ஆழியாறு ஆற்றில் இருந்து பள்ளிவிளங்கால் கால்வாய், அரியாபுரம் கால்வாய், காரப்பட்டி கால்வாய், பெரியணை கால்வாய், வடக்கலூர் கால்வாய் ஆகிய 5 கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 6, 400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இந்த தண்ணீர் அணையின் நீர்மட்டத்தை பொருத்து 135 நாட்களுக்கு இடைவெளி இன்றி வழங்கப்படும்.

120 அடி கொண்ட ஆழியாறு அணையில் நீர் மட்டம் தற்போதைய நிலவரப்படி 92.30 அடியாக உள்ளது. அணையில் 2,006 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1,081 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கென சுமார் 1,059 மில்லியன் கன அடி அளவுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story