ஊரக வளர்ச்சித்துறையில் மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்; மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஊரக வளர்ச்சித்துறையில் மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்; மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Aug 2019 3:45 AM IST (Updated: 19 Aug 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறையில் மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செ.சுருளிராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் எம்.பத்மநாபன், எம்.அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் ரா.சண்முகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள உதவி இயக்குனர் பணியிடங்களையும், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்களையும் உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும். தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும், 31 மாவட்ட ஊராட்சி அமைப்புகளையும் உள்ளடக்கிய ஊரக வளர்ச்சித்துறையில் மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்தல், திட்டங்களை அமல்படுத்துதல், பயனாளிக்கு உரிய தொகை விடுவித்தல், பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் பராமரிப்பு பணிகள், தெருவிளக்கு மற்றும் சாலை பராமரிப்பு பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்களே செய்ய வேண்டி உள்ளது. எனவே வட்டார அளவில் பொதுமக்களுக்கு சீரான முறையில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கக்கூடிய வகையில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 803 பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் சக்திவேல், முன்னாள் மாநில தலைவர்கள் செல்லமுத்து, சங்கரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

Next Story