எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்


எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் தீமிதி-பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

எறையூர், நாட்டார்மங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி- பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் சிலோன் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி கொடியேற்றமும், 15-ந் தேதி ஊருணி பொங்கலும், 16-ந் தேதி சந்தனக்காப்பும் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை முத்துமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலையில் கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. இதில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்குட ஊர்வலம்

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து படைத்து சாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story