விழுப்புரம் மாவட்டத்தில், 3-வது நாளாக கொட்டித்தீர்த்த மழை - அணை, ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணை, ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்தது. தற்போது அங்கு மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த 16-ந்தேதி பெய்த பலத்த மழையின்போது மேல்மலையனூர் அடுத்த கோவில்புரையூரில் வீடு இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு மாணவன் சிவபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். கீழ்பெரும்பாக்கம், கொத்தமங்கலம், சேர்ந்தனூர் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 10 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. இடைஇடையே பலத்த மழையாகவும் பெய்தது. 3-வது நாளாக நேற்று காலை பெய்த மழையால் விழுப்புரம் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் சென்றதை காணமுடிந்தது. மயிலம் பகுதியில் நேற்று காலை சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் தழுதாளி திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகில் உள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு நேற்று காலை 7.30 மணி முதல் தழுதாளி, எறையூர், நெமிலி, பெரும்பாக்கம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றினர். அதன்பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.
இதனிடையே மயிலம் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்ததோடு, அறுந்து விழுந்த மின் கம்பிகளுக்கு இணைப்பு கொடுத்தனர். அதன்பிறகு மாலை 5 மணியளவில் தழுதாளி உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும் இந்த மழையால் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
செஞ்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் வீணாக புதுச்சேரி கடலுக்கு சென்று கலக்கும். ஆகவே சங்கராபரணி ஆற்றில் சில இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஏரி நீர்வரத்து வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரவேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்த மழையால் அணை, ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த அணை, ஏரி, குளங்களின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. விழுப்புரம், மயிலம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வளவனூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று காலை 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காணை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 28 இடங்களில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த அடிக்கல் நாட்டு விழாக்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், காணை பகுதியில் நடைபெற இருந்த அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story