நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்


நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:15 AM IST (Updated: 19 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று இரவில் கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு அருகிலுள்ள கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (23). இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.

நேற்று இரவு கருப்பந்துறை மெயின் ரோட்டில் மணிகண்டன், சக கட்டிட தொழிலாளியான மாரியப்பன் என்ற மதன்(25), நண்பர்கள் கணேசன், சரவணன் ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் தனித்தனியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் 6 மர்மநபர்கள் வந்தனர்.

அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் திடீரென அரிவாளால் மணிகண்டனை காலில் வெட்டினான். கால் துண்டான நிலையில் அவர் கதறியவாறு ஓடியபோது மற்றொருவன் அவரது கழுத்தில் அரிவாளால் வெட்டினான். இதில் அவரது கழுத்து துண்டான நிலையில் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிதுடித்து சிறிது நேரத்தில் இறந்தார். அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவன் மாரியப்பனையும் வெட்டினான். அவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சாலையில் விழுந்தார். மற்ற 2 பேரும் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அந்த கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். மணிகண்டன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அனைவரும் கருப்பந்துறை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் நெல்லை துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் மணிகண்டன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க போலீசார் சென்றனர். ஆனால் அவரது உடலை மீட்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பிரச்சினைக்குரிய நபர்கள் இந்த வழியாக வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரத்துக்கு பின் மணிகண்டன் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்து விட்டனர். விடிய விடிய போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கருப்பந்துறை, விளாகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த படுகொலை குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சமீபத்தில் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற விளாகம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும், இக்கிராமத்தினருக்கும் இடையே சிறிது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருவதாகவும், அந்த விரோதத்தில் மர்ம கும்பல் இந்த படுகொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,‘ கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும், விளாகம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து விசாரித்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம், என்றார்.

Next Story