அரியூர் ரெயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்தனர்: தொடக்க விழாவுக்கு முன்னரே பயன்பாட்டிற்கு வந்தது
வேலூர்- அரியூர் ரெயில்வே மேம்பாலத்தை தொடக்க விழாவுக்கு முன்னர் பொதுமக்களே திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
வேலூர்,
வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் பிரசித்தி பெற்ற தங்கக்கோவில் உள்ளது. இக்கோவிலை காணவும், சக்தி அம்மாவின் ஆசியை பெறவும் மத்திய மந்திரிகள், கவர்னர்கள், வெளிநாட்டு பக்தர்கள் என ஏராளமானோர் தினமும் வருகை தருகின்றனர். எனவே வேலூரில் இருந்து அரியூர் வழியாக செல்லும் ஸ்ரீபுரம் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கி வருகிறது.
மேலும் அணைக்கட்டு, ஒடுகத்தூர், ஊசூர் மற்றும் அணைக்கட்டு அருகேயுள்ள மலைக்கிராம மக்கள் முக்கிய நகரமான வேலூருக்கு வர இந்த சாலையையே பயன்படுத்தி வந்தனர்.
இந்த சாலையில் தொரப்பாடிக்கும்-அரியூருக்கும் இடைப்பட்ட பகுதியில் காட்பாடி-விழுப்புரம் ரெயில் பாதை செல்கிறது. ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.22 கோடியே 98 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. ரெயில் தண்டவாளத்தின் மேல்பகுதி தவிர மற்ற பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால் ரெயில் தண்டவாள மேல்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் தாமதப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, ரெயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்றன.
இதற்கிடையே வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரியூர் ரெயில்வே மேம்பாலம் திறப்பது தாமதமானது. கடந்த 9-ந் தேதி வேலூர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின்னரும் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதுவும் தெரிவிக்கவில்லை.
அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை முதல் அரியூர் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து போக்குவரத்துக்காக பயன்படுத்த தொடங்கினர். மேம்பாலம் வழியாக பஸ், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின. திறப்பு விழாவுக்கு முன்னரே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story