ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி - ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு சென்றபோது பரிதாபம்


ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி - ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 8:43 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலியானார்கள். ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள புளியம்பட்டி கைலாசபுரம் பகுதியில் புனித ஜெபமாலை மாதா ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலய பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கல்லத்திகிணறு பகுதி மக்கள் சிலர் ஒரு வேனில் கைலாசபுரத்துக்கு சென்றனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டினார்.

அவர்கள் சென்ற வேன் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு பகுதியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த கல்லத்திகிணறு பகுதியைச் சேர்ந்த கரோலின் சூசை மனைவி மேரி (வயது 48), தோமஸ் மனைவி சந்திரா (35) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் வேனில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்தாய் (65), டோர்த்தி (65), ஸ்டெல்லா (43), ஜெஸ்டினா (42), சகாய பிரபு (40), பாத்திமா (60), சவுரியம்மாள் (60), வள்ளியம்மாள் (60), அன்னத்தாய், ஜேக்கப் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 12 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியான 2 பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சந்தித்து ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்க டாக்டரிடம் அறிவுறுத்தினார். விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story